அன்று ஒரு வாய்.. இன்று ஒரு வாய்.. அதுதான் பன்னீர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி :

பழமொழி ஒன்று உண்டு…காய்ந்த கொலையில் குதிரை மேய்ந்தால் என்ன? கழுதை மேய்ந்தால் என்ன? ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு என்பது கவுண்டமணி செந்திலும் சந்திப்பது போலத்தான். பன்னீர் யாருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார் என்றால் அது சசிகலா குடும்பத்திற்கு எதிராகத்தான். மாஃபியா கும்பல் என்று சொன்னார், தமிழ்நாட்டைக் கூறுபோட்டு விற்கும் குடும்பம், டிடிவி போன்ற கிரிமினல், அரசியல் வியாபாரி, அரசியல் துரோகியை பார்த்ததில்லை என்று சொன்னவர் பன்னீர்.

அதுமட்டுமில்லாமல்,  தர்மயுத்தம் தொடங்கிவிட்டு அம்மாவின் மரணத்தில் எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும் என்றும் சசிகலா குடும்பத்தின் மீதுதான் சந்தேகம் என்று சொல்லிவிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக மாறினார். பின்னர் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி நீதிபதி சம்மன் அனுப்பியும் பன்னீர் போகவில்லை. பின்னர் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று அந்தர்பல்டி அடித்தார். அரசியலில் சந்தர்ப்பவாதம், தூரோகத்தின் உச்சக்கட்டம் யார் என்றால் அது ஓபிஎஸ் தான். இப்படிப்பட்டவர் டிடிவியைப் போய் சந்தித்து பேசியிருப்பது எந்தவித அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஓபிஎஸ் போல அதிமுகவினர் யாரும் குழப்பவாதி கிடையாது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் இவர்களை எந்த காலத்திலும் அதிமுகவில் சேர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடையாது. அதே நேரத்தில் கொல்லைப்புறம் வழியாக வந்தால், குறிப்பாக பிஜேபி மூலம் நிர்பந்தப்படுத்தினால் என்று கேட்கிறார்கள். ஒருபோதும் பிஜேபி அந்த நிர்பந்தத்தினை செய்யாது. இந்த மூன்று பேருக்கு அதிமுக கதவுகள் சாத்தப்பட்டுவிட்டது. அவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை.

ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு என்பது, கடல் கடந்து இருவரும் எப்படி வணிகம் செய்வது என்பதைக் குறித்து இருக்கலாம் அல்லது திருச்சியில் உங்கள் சொற்படி சரியாக மாநாடு நடத்தப்பட்டுவிட்டது என்று சொல்வதற்காக இருக்கலாம் அல்லது தலைமைக் கழகமான எம்ஜிஆர் மாளிகையை உங்கள் ஆதரவுடன் அடித்து நொறுக்கி கொள்ளை அடித்தேன் என்று சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் கூட்டங்கள் நடத்த உங்களின் மேலான ஆதரவு தேவை என்று பேசியிருக்கிறாம். திமுக எனும் தீய சக்தியைச் சுட்டிக் காட்டிய புரட்சித் தலைவருக்கும் புரட்சித் தலைவிக்கும் தூரோகம் செய்கிறார் பன்னீர்.

கருணாநிதியைப் பற்றி பெருமையாக பேசுவது, தன் தந்தை கருணாநிதியின் இரசிகர் என்று சொல்வது, மகனை வைத்து ஸ்டாலின் அர்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார் என்று பேச வைப்பது போன்றவற்றை அரங்கேற்றினார் ஓபிஎஸ். இதனை அதிமுக தொண்டன் மன்னிக்கவே மாட்டான். இப்போது டிடிவியை சந்தித்திருக்கிறார். இவர் ஒரு அமாவாசை, அவர் ஒரு அமாவாசை.

எங்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக சிறப்புடன் இயங்கிவருகிறது. அன்றே சசிகலா அவர்கள் என்ன சொன்னார்கள், ஓபிஎஸ் ஸ்டாலினைப் பார்த்து சிரிக்கிறார், அவருடன் இணக்கமான போக்கை வெளிப்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டினார். எனவே ஓபிஎஸ் சசிகலாவை கட்சியில் சேர்க்கமாட்டேன் என்றார். இப்போது பார்த்தால் வாய்க்கு வாய் சின்னம்மா என்று அழைக்கிறார். அன்று ஒரு வாய், இன்று ஒரு வாய் பன்னீருக்கு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறினார். காகித ஓடம் கடலையின் மேலே மூவரும் போவோம் என்றப் பாடல் மாதிரிதான் மூவரும் போகவேண்டும். அவர்களுக்கு திமுகவின் இடம் இல்லை.

Exit mobile version