முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் அறிவுரைக்கு இணங்க, புதிய உறுப்பினர்களை சேர்த்தல், உறுப்பினர் அட்டைகள் புதுப்பித்தல் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று அதற்கு கடைசிநாள் என்பதால், அதற்கான வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 70 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அதிலும் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இந்த ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்ததற்காக, அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.
விடியா அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
விலைவாசியை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டமானது நாளை தொடர இருக்கிறது. ஊழல் தான் முக்கிய குறிக்கோள் என்று செயல்படும் திமுக அரசை கண்டித்து நாளை காலை ஒன்பது முப்பது மணியளவில் ராஜரத்திரனம் ஸ்டேடியம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அனைத்து தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், மதுரையில் நடைபெறும் அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு கலந்து கொள்ள அனைவரும் தயாராக உள்ளனர்.
வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் போன்றவை திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய ஆட்சியில் அப்படி எதுவும் நடைபெறுவதில்லை. அதிமுக ஆட்சிகாலத்தில் புரட்சித் தலைவி அவர்கள் சட்டமன்றத்தில், பெரிய பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று கூறி, அதனை செயல்படுத்தியும் காட்டினார். ஆனால் திமுக ஆட்சியில் அப்படி எந்த வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள். ஆளுங்கட்சியினருக்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விட்டு விடுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினருக்கு முதல் தகவல் அறிக்கையானது பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து திமுகவினர் பல்வேறு அராஜக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் சரியான ஜட்ஜ்மென்ட் யார் தருவார்கள் என்றால், அது வாக்காளராகிய மக்கள் தான்.
என்.டி.ஏ கூட்டத்தில் பொதுச்செயலாளர்..!
நேற்று நடைபெற்ற என்.டி.ஏ கூட்டத்தொடரில் நமது பொதுச்செயலாளர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி 26 நாங்கள் 38. அதன் அடிப்படையில் நாங்கள் தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தலைமையில் அமோக வெற்றிபெறும்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், ஈடி வந்துவிட்டதா, ஐடி ரெய்டு வந்துவிட்டதா என்று பயப்படுகிறார்கள். இரண்டரை லட்சம் யூனிட் செம்மணை சுரண்டி ஊழல் செய்து இருக்கிறார் பொன்முடி. அவரது மகன் கவுதம சிகாமணி நூறு கோடி ரூபாய்க்கு நிலக்கரியை இந்தோனேசியாவிற்கு விநியோகித்திருக்கிறார். யாரு யாருக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்பது வெளிவரும். முதலில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி, இப்போ பொன்முடிக்கு, அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சுவலி ஆரம்பிச்சுடும். பொன்முடிக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது. எப்போ கைதாவோம் என்கிற மரண பயத்தை அவருக்கு ஈடி கொடுத்துள்ளது. தூக்கம் இல்லாத கேபினட் தான் தற்போது தமிழகத்தினை ஆண்டு வருகிறது.
அடுத்தடுத்து அமைச்சர்கள் லிஸ்ட்-ல இருக்காங்க!
செந்தில்பாலாஜி ஒரு சிறைக் கைதி, அவரை நீக்குவதுதான் சரி. ஆனால் அமைச்சர் என்கிற ஷீல்டை இன்னும் செந்தில்பாலாஜிக்கு வைத்திருப்பது ஏன்? இதனால் தண்டச் செலவுதான் ஏற்படுகிறது. பணத்தினை ஏன் வீணடிக்கிறீர்கள் என்றுதானே கேட்கிறோம். ஜெயிலில் அமர்ந்திருப்பருக்கு எதற்கு மந்திரிப் பதவி. நானும் கைதானவன் தான். பாயிலும் தரையிலும் தான் படுத்திருந்தேன். குடிக்க தண்ணீர் கூட குடிக்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜிக்கு சொகுசி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறிக்கொழம்பு என்று ஜெயிலர்களே செய்து கொடுப்பார்கள். ஏ கிளாஸ் க்கு உண்டான வசதியை மட்டுமே செந்தில் பாலாஜிக்கு செய்து தர வேண்டும். அதனை மீறி செய்தால் கடுமையான கண்டனம் தெரிவிப்போம்.
Discussion about this post