வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் அதிமுக நிர்வாகிகள், விழிப்புடன் செயலாற்றி, வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிமுக முகவர்கள் காலை 6 மணிக்கே மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகள் சரியாக உள்ளதா என்பதை ஒப்பிட வேண்டும்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மாற்று கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணிப்பதுடன், திமுகவினர` தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதை அறிந்தால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னரே வெளியில் வர வேண்டும்.
அதிமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களும், அவர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஏஜெண்ட்டுகளும் வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.