மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வரும் தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கத்தில் உள்ள நீரின் அளவை குறைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியாவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள், 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் நீர் புகுந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற பயன்படும் உயர் திறன் கொண்ட இயந்திரங்கள் பழுதடைந்ததால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது இயந்திரம் சீர் செய்யப்பட்ட நிலையில், 9 நாட்களுக்கு பிறகு மீண்டும் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ஒடிசா தீயணைப்பு படையினர் நீரினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீரின் அளவு குறைக்கப்பட்ட பின்னர் சுரங்கத்திற்குள் சென்று தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post