ஜப்பான் திரையரங்குகளில் 'முத்து' திரைப்படம் மறுவெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம், ஜப்பானிலும் பெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் அங்கு மறு வெளியீடு செய்யப்பட உள்ளதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

1995-ம் ஆண்டு, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி, மீனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற முத்து திரைப்படம், 1998-ம் ஆண்டு, ஜப்பானில், ஜப்பானிய மொழி சப் டைட்டிலுடன் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி, அங்குள்ள ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஜப்பானில் ரஜினிக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தையும் இந்த படம் பெற்றுத் தந்ததுடன், ஜப்பானிய ரசிகர்கள் தமிழ் கற்கும் அளவிற்கு முத்திரை பதித்தது. முத்து – ஓடோரு மஹாராஜா என்ற பெயரில் படம் அங்கு வெளியாகி, தற்போது 20-வது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, படத்தை அங்கு மறு வெளியீடு செய்ய, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா முடிவு செய்துள்ளது.

படத்தை, டிஜிட்டல் முறையில் புதுப்பித்துள்ளதாகவும், படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கண்காணிப்பில், 5.1 Surround ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கவிதாலயா வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23-ம் தேதி, டோக்கியோவில் முத்து திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version