18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் தீர்ப்பு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தற்போதைய தமிழக சட்டபேரவையில் உள்ள கட்சிகளின் பலம் குறித்து பார்ப்போம்.
தமிழக சட்டபேரவையின் மொத்த பலம் 234 ஆகும். இதில் எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாலும் 2 தொகுதிகள் காலியாக இருப்பதாலும் சட்டபேரவையின் மொத்த பலம் 214ஆக குறைந்துள்ளது. அதன்படி பெரும்பான்மையை நிரூபிக்க 108 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலேயே போதும்.
ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு சபாநாயகர் தனபாலை தவிர்த்து 109 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதுதவிர இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் உள்ளனர். இதில் கருணாஸ் தற்போது அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதேபோல் திமுகவுக்கு 88 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். அதிமுகவை சேர்ந்த ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு, உட்பட 4 பேர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என 3வது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார். இதனால் அதிமுக அரசுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது.
Discussion about this post