தேர்தல் முடிந்த பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தம்பித்துரையை ஆதரித்து, முதலமைச்சர் மக்கள் முன்பு திறந்த வெளிவேனில் தோன்றி, பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிந்த பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும், அரசின் காப்பீட்டு அட்டை மூலம் 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவனையில் ஏழை, எளிய மக்கள் மருத்துவ உதவிகளைப் பெறுகின்றனர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்றும், பிரதமரானால் காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் எனவும் கர்நாடாகவில் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கரூரில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் தம்பித்துரைக்கு ஆதரவாக வாக்குசேகரித்த முதலமைச்சர் கட்டப்பஞ்சாயத்து செய்யும் திமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post