மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான திறக்கப்பட்ட தண்ணீர், 169 நாட்களுக்கு பிறகு நாளை மாலை நிறுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28 -ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்தாண்டு அணையில் போதிய இருப்பு இல்லாததால், ஆகஸ்ட் மாதம் காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இதுவரை 150 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்ட நிலையில், 169 நாட்களுக்குப் பிறகு நாளை மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.67 அடியாகவும், நீர் இருப்பு 75.13 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு 310 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.