ஆப்கானிஸ்தானுடன் போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் வெல்ல முடியும்: டிரம்ப்

ஆப்கானிஸ்தான் உடன் போரிட்டால், தங்களால் ஒரே வாரத்தில் போரில் வெல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், ராணுவ வீரர்களைப் போல் அல்லாமல், காவல்துறையினரைப் போன்று அங்கு அமெரிக்க படைகள் செயல்பட்டு வருவதாகவும் அவ்வாறு இல்லாமல், ராணுவ வீரர்களைப் போல் போரிட்டால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று குறிப்பிட்டார்.

எனினும், சுமார் ஒரு கோடி மக்கள் பலியாகி விடுவார்கள் என்பதால் தான் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறிய டிரம்ப். தலிபான் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே கடந்த சில வாரங்களாக கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க, பாகிஸ்தான் உதவும் என்று நம்புவதாக தெரிவித்தார்

Exit mobile version