பிரியாணிக்காக கடைக்காரரை அடிக்கும் திமுகவைப் போல் அல்லாமல், மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இயக்கமாக அதிமுக என்றைக்கும் இருக்கும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, உடன் இருப்பவர்கள் எப்போதும் தன் எஜமானருக்கு துரோகம் செய்வார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருவதாகக் கூறினார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவால் அதிமுகவில் ஒரு துரோகம் அரங்கேற்றப்பட்டதாக தெரிவித்த அவர், அவரின் வஞ்சகமும் சூழ்ச்சியும் அப்போது தான் வெளிப்பட்டதாகத் தெரிவித்தார்.
சசிகலாவின் தயவால் அதிமுகவில் நுழைந்த தினகரனின் சுயரூபம் தெரிந்த உடன், அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா ஒதுக்கி வைத்ததாகவும், கோடிக் கணக்கில் கொள்ளை அடித்த பணத்தை பாதுகாக்கவே தினகரன் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு பல சோதனைகள், அவமானங்களைக் கடந்து ஜெயலலிதா பாதுகாத்த அதிமுகவை, கொள்ளைப் புறமாக வந்தவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என முடிவெடுத்து, இன்று வெற்றிகரமாக 47 ம் ஆண்டு தொடக்க விழாவில் அடியெடுத்து வைத்துள்ளதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத அதிமுகவை அசைத்து விடலாம் என ஸ்டாலின் கனவு காண்பதாக குற்றம்சாட்டிய அவர், கருணாநிதி மகன் என்பதைத் தாண்டி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை எனக் கூறினார்.
கடைக்கோடித் தொண்டனாய் இருந்து கட்சியின் பொறுப்பை முதலமைச்சர் பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பெற்றார்கள் என்று கூறிய கே.பி.முனுசாமி, அடிமட்ட தொண்டனும் கட்சியின் உயர் பதவியை அடைய முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டார்.