அதிமுக தலைமையின் உத்தரவையடுத்து, மழை வேண்டி கோயில்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சனையை போக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் மழை வேண்டிய யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் முருகன் கோயிலில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பூரண கும்ப கலசங்கள் வைத்து யாகவேள்வி நடைபெற்றது. மழை வேண்டி யாக வேள்வியில் நவதானியங்கள் செலுத்தி வழிபாடு நடைபெற்றது. இதில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.