கையாலாகாத ஸ்டாலின் அரசை தூக்கி எறியும் மாநாடாக அதிமுகவின் எழுச்சி மாநாடு அமையும் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடியா திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டதை தவிர, அதிமுக மாநாட்டை ஒளிபரப்பக் கூடாது என தமிழக ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டினார். ஆனால், நாளை நடக்கும் அதிமுகவின் எழுச்சி மாநாடு கையாலாகாத ஸ்டாலின் அரசை தூக்கி எறியும் மாநாடாக அமையும் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
கடந்த 2010ல் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை, தற்போது எதிர்ப்பதாக கூறி மாணவர்களின் இறப்பில் ஸ்டாலின் ஆதாயம் தேடுவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், மகன் உதயநிதிக்கு அரசியல் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற நாடகத்தை ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுத்துவதாகவும் விமர்சித்தார்.
கச்சத் தீவை விட்டுக் கொடுத்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் போராடி மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தேன் என்று கூறும் ஸ்டாலின், முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, கச்சத்தீவை மீட்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார். புரட்சித்தலைவி ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திய அரசியலமைப்பின்படி செல்லாது என்று கூறி வழக்கை தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.