அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொதுச்செயலாளர் தேர்தலை தற்போது பன்னீர் தடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். கட்சி விதிகளில் திருத்தங்களை செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், எதிர் தரப்பினரின் வாதம் முற்றிலும் தவறானது என்றும், அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஜூலை 11 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்றும், பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான திருத்தங்கள் 2017-ல் கொண்டு வரப்பட்டதாகவும், அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஒன்றரை கோடி உறுப்பினர்களும் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக வரவேண்டும் என விரும்புவதாகவும், இதில் ஒரு சதவீதம் கூட பன்னீருக்கு ஆதரவு இல்லை எனவும், அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் கிடையாது என்பதால், வழக்கு தொடர 3 பேருக்கும் அடிப்படை உரிமை இல்லை என்றும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்கு பிறகு வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என உத்தரவு பிறப்பித்தார். மேலும், அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்குகளில், மார்ச் 22-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் எனவும், மார்ச் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.