அதிமுக பொதுச்செயாலாளர் தேர்தலில் போட்டியிட, கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது, அவருக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று காலையில் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகமான, எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மானுவை தாக்கல் செய்ய, கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி காலையில் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வழி நெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் எம்ஜிஆர் மாளிகையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாளிகையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் பெறுகின்ற பணி நிறைவடைந்தது.