கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவானது கூடியது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டன. குறிப்பாக ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பெயரில் ஒற்றைத் தலைமையானது அதிமுகவில் கொண்டுவரப்படும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக கட்சிக்கு துரோகம் விளைவித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அத்தீர்மானத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர் மற்றும் அவரது ஆதவரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உயர்நீதிமன்றம் முதலில் இந்த தீர்மானத்தினை தடை செய்தது. பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
பிறகு பன்னீர் மற்றும் அவரது தரப்பினரிடமிருந்து பொதுக்குழுத் தீர்மானத்தின் மீது தடை விதிக்க வேண்டும் என்று மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது. முதலில் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் ஆனால் அதன் வெற்றியாளர் அறிவிப்பினை தீர்ப்பிற்கு பிறகே அறிவிக்க வேண்டும் என்று கூறியது. அதனையொட்டி பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மட்டுமே தற்போது முடிந்துள்ளது. தீர்ப்பிற்கு பின்னர் வாக்கு செலுத்துதல் நடைபெறும் என்று அதிமுக தலைமை கூறியுள்ளது. தற்போது பொதுக்குழுத் தீர்மானத்தின் வழக்கின் மீது இன்றைக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.