கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்குழுவில் அதிமுகவின் இடைக்காலப் பொதுசெயலாளராக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இருப்பார் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் பொதுக்குழு முடிவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தற்போது அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் தினேஷ் – மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் எதிர்கட்சித் தலைவரது உருவப்படத்திற்கு பாலாபிசேகம் செய்து தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார்கள். இனி அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடரும் என்ற செய்தி கட்சியின் தொண்டர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு அதிமுகவிலிருந்து விலகி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு நடந்துகொண்டவர்களின் தலையில் உச்சநீதிமன்றம் வைத்த குட்டாக பார்க்கப்படுகிறது.