நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு சீரழித்துவிட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசாக அண்ணா திமுக அரசு விளங்கியதாக தெரிவித்துள்ளார்.
எத்தனையோ நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அண்ணா திமுக அரசு வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், 2017ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஊதியக் குழு அமைத்து நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதவிர, வீட்டுக் கடன், வாகன கடன், பெண் ஊழியர்களுக்கான சலுகை ஆகியவை வழங்கப்பட்டு, அரசு ஊழியர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்திய அரசு, அதிமுக அரசு எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசு ஊழியர்கள் மாநாட்டில், அண்ணா திமுக அரசு நிதி நிர்வாகத்தை சீரழித்துவிட்டதாக முதலமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.
ஏதோ திமுக தான், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தது போல் ஸ்டாலின் காட்டிக் கொள்வது நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமைக்கப்பட்ட, “முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு” என்னவானது, அந்த குழுவின் கூட்டம் கூட்டப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஒருங்கிணைப்பாளர், ஆளுநர் உரையில் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும் வினவியுள்ளார்.
மொத்தத்தில் ஒரு திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளதாக சாடியுள்ள ஒருங்கிணைப்பாளர், அண்ணா திமுக அரசின் மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பித்து கொள்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.