பொதுக்கூட்டத்துக்கு அனுமதியளிக்க கோரிய வழக்கு, நாளை விசாரணை!

மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அதிமுக ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்திற்கு அனுமதியளிக்கக் கோரிய வழக்கானது நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தித் திணிப்பிற்கு எதிரானப் போராட்டம் 1937ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனால் 1940ஆம் ஆண்டில் கட்டாய இந்திக் கல்வியை அன்றைய மத்திய அரசு  விலக்கம் செய்தது. 1950ஆம் ஆண்டு நடப்பிற்கு வந்த இந்திய அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி, 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்திமொழி அரசுப் பணிமொழியாக விளங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இம்முயற்சி இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலையை கிளப்பியது, முக்கியமாக, தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. குறிப்பாக, 1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாளில் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அதிக அளவில் மாணவர்களே இப்போரட்டத்தில் பங்கேற்றனர். அன்றைய அரசின் வன்முறை காரணமாக போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் தீவைப்பு போன்ற கலவரங்கள் அரங்கேறின. பலர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் கோவைக் காவல்துறையானது கோவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்காமல் இருந்தது. எனவே அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது.

Exit mobile version