சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2 ஆம் திகதி விண்ணில் அனுப்புவதற்கு ஆயத்தமாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வினைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் ஆதித்யா எல் 1-ம் அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சந்திரயான், மங்கள்யான் ஆகிய சாதனைகளைத் தொடர்ந்து ஆதித்யா எல் 1-னும் வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆதித்யா எல் -1 சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே அறிய உதவுவதற்கு இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1
சூரியனை ஆராய்வதன் மூலம் நமக்கு என்ன பயன் என்று கேள்வி எழமால் இல்லை. அதற்கு காரணமும் இருக்கிறது. நாம் வாழும் பூமியானது இப்பிரஞ்சத்தின் ஒரு கோள். இப்பிரஞ்சத்தின் மையக் கருவாக இருப்பது சூரியன் என்கிற மிகப்பெரிய நட்சத்திரம். சூரியனை ஆராய்வதன் மூலம் ஒட்டுமொத்த பிரஞ்சத்தையும் ஆராய்ந்துவிடலாம் என்பது நம் விஞ்ஞானிகளின் கணக்கு. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும், ஐரோப்ப விண்வெளி நிறுவனமும் சூரியனைப் பற்றி தெரிந்துகொள்ள பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ஆனால், ஆதித்யா எல் 1-ஆனது சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் வேலையிலும் ஈடுபட உள்ளது. சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள் இருக்கும். சூரியனின் தொடர்ந்து மைய இணைவு முறையால், ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தின் போது அதிக அளவு ஆற்றலானது வெளியிடப்படுகிறது. சூரியனின் மையம் கோர் என்று அழைக்கப்படுகிறது. இதன் வெப்பநிலை பதினைந்து லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும். சூரியனின் மேற்பரப்பு குரோமோஸ்ஃபியர் ஆகும். வெப்பமானது மையத்திலிருந்து இந்த மேற்பரப்புக்கு செல்லும்போது படிப்படியாக வெப்பநிலையானது குறையும். இந்த மேற்பரப்பின் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் ஆகும். சூரியனின் மேற்பரப்பானது தொடர்ந்து அதிக அளவு சூரியப் புயல்களை உமிழ்கிறது. சில நேரங்களில் அதிக அளவு அணுக்கரு பிளவு ஏற்பட்டு சூரிய புயல்கள், சூரிய வெடிப்பு புயல்களாக மாற்றம் பெறுகிறது.
சாதிக்குமா இந்தியா?
இத்தகைய புயல்கள் பூமியைத் தாக்க முடியுமா என்றால், பூமியின் வளிமண்டலமும் காந்தப்புலமும் அதற்கு தடுப்பாக உள்ளது. ஆனால் இன்னொரு வகையில் இந்த சூரியப் புயல்கள் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். வானத்தில் உள்ள செயற்கைக்கோளை இந்த சூரியப் புயல்கள் தாக்குவதன் மூலம், பூமியில் உள்ள மின் கட்டமைப்புகள், தொடர் கட்டமைப்புகள் போன்றவை பாதிப்பை சந்திக்கும். இதனால் பொருளாதார இழப்பீடு அதிகளவு ஏற்படும். மேலும் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கக்கூடிய விண்வெளி வீரர்கள் இந்த சூரிய புயல்கள் மூலம் நேரடியான பாதிப்பினை சந்திப்பார்கள். இதனால் இந்த சூரியப் புயல்களை ஆரம்பத்திலே கண்டறிவது அவசியம் ஆகிறது. இதனைத் தான் ஆதித்யா எல்-1 செய்ய உள்ளது. இதன் மூலம் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு விண்கலம் அனுப்பப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு பிறகு, இந்த ஆய்வினை இந்தியா தான் மேற்கொள்கிறது. சந்திரயான் -3 ல் வெற்றி கண்டதுபோல, ஆதித்யா எல்-1 லும் வெற்றி காண்போமாக!