நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள், நவம்பர் 3ஆம் தேதி முதல் புதிய அமர்வில் விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018-ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழுவை அமைக்க கோரி, நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தேர்தலை நடத்தக் கோரி நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதியினை நியமித்து மூன்று மாதத்தில் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்த வழக்குகள் குறித்த விசாரணை பட்டியலிடப்பட்ட போது, வழக்கை நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, நவம்பர் 3-ம் தேதி முதல் வழக்கு விசாரணை புதிய நீதிபதிகள் அமர்வில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.