நில மோசடி புகார் அளித்த நடிகர் சூரி – அதிர்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் சூரியிடம், 2,70,00,000 ரூபாய் நில மோசடி செய்த விவகாரத்தில், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. மீதான புகார், மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைபடத்தில் நடித்த சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியைத் தராமல், தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் இழுத்தடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குட்வாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா ஆகியோர் 5,25,00,000 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் உள்ளதாகத் தெரிவித்து சூரியிடம் விற்பனை செய்துள்ளனர்.

அந்த நிலத்தில் பல பிரச்னைகள் இருப்பதாக சூரிக்கு தெரியவந்ததால், இதுகுறித்து ரமேஷ் குட்வாலாவிடம் தெரிவித்துள்ளார். நிலத்தை திரும்பப் பெறுவதாகக் கூறி பணத்தில் 60 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதிபணம் 2 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் இழுத்தடித்ததால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், நடிகர் சூரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரமேஷ் குட்வாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. சூரி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக, நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீதும், தனது தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நடிகர் சூரி வரும் 29ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Exit mobile version