தனக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை. எந்த சமூக ஊடக கணக்குகளிலும் இணைய விரும்பவில்லை என்று நடிகர் அஜித் திட்டவட்டமாக மீண்டும் அறிவித்துள்ளார்.
நடிகர் அஜித் வெளியிட்டதாக, கையொப்பம் இடப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த கடிதத்தில், “என்னுடைய ரசிகர்களுக்கு ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணையவேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும், இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களின் எனது ரசிகர்கள் எந்தவிதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொள்கின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நடிகர் அஜித் சார்பில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அஜித் சமூக வலைதளத்தில் இணைவது குறித்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அஜித் சமூகவலைதளத்தில் இணையவிருப்பதாக வெளியான கடிதம் அஜித்தால் வெளியிடப்படவில்லை என்றும், அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை மறுப்பதாகவும், அஜித்தின் போலி கையொப்பத்தை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அஜித் தனக்கு எந்த ஒரு சமூக ஊடகக்கணக்குகளும் இல்லை என்றும், சமூக ஊடங்களில் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் அவர் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்று கடந்த காலங்களில் வெளியான அறிக்கைகளை நினைவுபடுத்தியுள்ள அவர், அஜித் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக நான்கு அறிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை,
➤ அஜித்துக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.
➤ அஜித் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.
➤சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அஜித் ஆதரிக்கவில்லை
➤மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறிவந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை
என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு, அஜித்தின் கையொப்பத்தை பயன்படுத்தி, தவறான அறிவிப்பை வெளியிட்டு மோசடி செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கும் முன்பு, அஜித் அரசியலுக்கு வரப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதைத்தொடர்ந்து, தான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்றும் தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் பெயரில் வெளியான போலி அறிக்கை:
அஜித் சார்பில் வெளியாகியுள்ள மறுப்பு அறிக்கை: