கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளின் தாக்கத்தில் இருந்து இந்திய தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களைக் காக்க விரைவில் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கொரோனா தாக்கத்தால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து இந்திய தொழில்துறையினர் உள்பட அனைத்து தரப்பினரையும் காப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மருந்து தயாரிப்பு, ஜவுளி, ரசாயனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் துறையினர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர், வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் விலைவாசி உயரும் அச்சம் ஏதுமில்லை என்று கூறினார். இப்பிரச்சனையால் எதிர்காலத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் எந்த வகையான தாக்கம் ஏற்படும் என்பதை இப்போதே கணித்துக் கூற முடியாது என்றும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு நாட்டில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.