சென்னையில், பெண்களுடன் உல்லாசமாக இருக்க நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற கொள்ளையனைக் காட்டிக்கொடுத்த காவல்துறையின் மோப்பநாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர், கார்த்திக்கின் வீட்டை சோதனையிட்டனர். பிறகு மோப்பநாய் பிரிவுக்கு, காவல்துறையினர் தகவல் தெரிவிக்க, அவர்களும் அங்கு விரைந்தனர்.
மோப்ப நாய் அர்ஜூன் வீட்டின் பீரோவில் இருந்து அங்குலம் அங்குலமாக அலசி குற்றவாளி சென்ற பாதையைக் காவல்துறைக்கு அடையாளம் காட்டியது. அதோடு குற்றவாளி பதிவாகி உள்ள சிசிடிவி கேமரா இருக்கும் இடத்தில் சென்று நின்றது. இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது, கார்த்திக்கின் வீட்டின் அருகே இருக்கக்கூடிய கோகிலா என்பவருடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்த சதீஷ்குமார் என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளி சதீஷ்குமாரைக் கைது செய்த காவல்துறையினர், நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
புகார் அளித்த 3 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்தது, தமிழக மோப்பநாய் பிரிவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படும் நிலையில், கார்த்திக்கின் மனைவி உருக்கமாக நன்றி தெரிவித்தார்.
விசாரணையில் ஏற்கெனவே சதீஷ்குமார் இதுபோன்று தனது அம்மா மற்றும் தனது உறவினர்கள் வீடுகளில் நகை பணத்தைக் கொள்ளையடித்துப் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து நகைகளை மீட்டுக் கொடுத்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோரை, மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.