ஐஎஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதில் கோனான்( Conan) என்ற மோப்ப நாய் முக்கியப் பங்காற்றியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார். பாக்தாதியைத் தேடும் பணியில் 4 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்தச் செயல்திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற மோப்பநாய். தேடுதல் பணியின்போது நாய்க்கு லேசான காயம் ஏற்பட்டது.
தற்போது, காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. பாதுகாப்புக் கருதி நாயின் பெயர் முதலில் வெளியிடப்படவில்லை. ஆனால், பின்னர் டிரம்ப் ட்விட்டரில் `Conan’ என வெளிப்படையாகவே ட்விட்டரில் அறிவித்தார். மேலும் இதனை `ஹீரோ டாக், திறமை மிக்க நாய்’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து கூறியிருந்தார்.
பொதுவாகவே, அமெரிக்க ராணுவத்தில் எந்தச் சூழலையும் சமாளிக்கக் கூடிய திறமைமிக்க 50 நாய்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாய்கள் K9 officers என்று அழைக்கப்படுகின்றன. ராணுவத் தாக்குதலுக்கு உதவியாகவும் பேரிடர்க் காலங்களில் மீட்புப் பணிகளிலும் இந்த நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. குண்டு துளைக்காத உடைகள், நவீன கேமராக்கள், ரேடியோக்கள், இரவிலும் தெளிவாகப் பார்க்கக்கூடிய லென்ஸ்கள் ஆகியவை இவற்றின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு நாயின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்களின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எந்தப் பகுதியிலும் திறமையாக ராணுவ வீரர்களின் நண்பனாகச் செயல்படும் வகையில் இந்த நாய்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பின்லேடனைப் பிடிக்கும் பணியிலும் ஒரு நாய் பயன்படுத்தப்பட்டது. அதன் பெயர் கெய்ரோ. இந்த நாய் பெல்ஜியன் மிலினாய்ஸ் ரகத்தைச் சேர்ந்தது. பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் நுழைந்தபோது, வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பது, ரகசிய இடங்களை அறிவது எனப் பெரும் உதவியாக இருந்தது கெய்ரோ. பின்லேடனைக் கொன்றதையடுத்து, வாஷிங்டனில் நேவி சீல் வீரர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா கெய்ரோவை சந்தித்து ஹீரோ டாக் எனப் பாராட்டினார். 2011ஆம் ஆண்டு டைம் இதழ், `உலகின் மதிப்புமிக்க விலங்கு’ என்ற விருதை கெய்ரோவுக்கு அளித்துச் சிறப்பித்தது. இப்போது அந்த வரிசையில் `Conan’ இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த அமெரிக்காவின் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளது CONAN.