"துரிதமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்" சென்னை மாநகராட்சி தீவிரம்!!

ஊடரங்கு காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் குறைவாக உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை சென்னை மாநகராட்சி தூரிதமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி, தி.நகரில் நடைபாதை வளாகம், பல அடுக்கு வாகன நிறுத்தம், பூங்கா சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாம்பலம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே நடைமேம்பாலத்துடன், நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய ஆகாய நடைபாதையை இணைப்பதற்கு ரயில்வே துறை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

எனவே, அந்த பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, வில்லிவாக்கம் பகுதியில் 18 ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்படாத ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 58 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், புழல் ஏரி பகுதியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும், இந்த ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை காலங்களில் புழல் ஏரியில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படும்போது, ஆமுல்லைவாயல், வடப்பெரும்பாக்கம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையை சரி செய்யும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலங்கள் அனைத்தும் வண்ண விளக்கு அலங்காரங்களுடன் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version