பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி பேராசிரியைக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவருக்கு மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். இதனால் மன உளைச்சளுக்கு ஆளான பேராசிரியை நீதிகேட்டு அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்.

பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் காவல்துறை உயரதிகாரிகளையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்ஸ்பெக்டரில் தொடங்கிய இந்த விவகாரம் காவல்துறை உயரதிகாரிகள் வரை நீண்டிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் திருவண்ணாமலையை சேர்ந்த உறவினரான ஆண்டனி என்பவர் பேராசிரியை வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை செல்ஃபோனில் வீடியோவாக எடுத்தவர் அதனை பேராசிரியையின் செல்ஃபோனுக்கும் அனுப்பி மிரட்டியிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன பேராசிரியை திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த ஆபாச வீடியோக்கள் இருந்த செல்ஃபோனை ஆதாரத்துக்காக வாங்கி வைத்துக்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் லதா வழக்கு பதிந்து விசாரணை நடத்திய நிலையில், உறவினர் ஆண்டனியும் கைது செய்யப்பட்டார். ஆனால் இத்துடன் பிரச்சனை தீர்ந்தது என நினைத்திருந்த பேராசிரியைக்கு அதன்பிறகுதான் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

FIR ல் தவறான தகவல்கள் இருந்ததால் அதனை திருத்தம் செய்வதற்காக, திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையரை சந்தித்து பேராசிரியை மனு அளித்திருக்கிறார். இந்த வழக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால் அங்கே மாற்றப்பட்டிருக்கிறது. அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமார், வழக்கு தொடர்பாக விசாரித்திருக்கிறார். அதற்காக பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த ஆபாச வீடியோக்கள் இருந்த செல்ஃபோனை, பெண் காவல் ஆய்வாளர் லதாவிடம் இருந்து காவல் ஆய்வாளர் சுகுமார் வாங்கியிருக்கிறார். இதன்பிறகு பேராசிரியைக்கு தொடர்ந்து ஃபோன் செய்து பேசிய காவல் ஆய்வாளர் சுகுமார், அவருடன் நெருக்கமாகி இருக்கிறார். மேலும் பேராசிரியை குறித்து மற்றொரு காவலர் மூலம் விசாரித்த ஆடியோவும் வெளியாகி இருக்கிறது.

பேராசிரியைக்கு உதவுவதாகக் கூறி இரவும் பகலும் அவருடன் செல்ஃபோனில் பேசத் தொடங்கியிருக்கிறார். வாட்ஸ் அப் உரையாடல் என நீண்ட நெருக்கத்தின் விளைவாக ஒரு கட்டத்தில் பேராசிரியைக்கு ஆபாச புகைப்படங்களையும் இன்பெக்டர் சுகுமார் அனுப்பியிருக்கிறார். ஒருகட்டத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் சுகுமார், சம்மதிக்காவிட்டால் செல்ஃபோனில் இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனக்கு திருச்சி மண்டல வடக்கு துணை ஆணையர் அன்புவை தெரியும் என்றும், அவரிடம் சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனால் ஆவேசமான இன்ஸ்பெக்டர் சுகுமார் தான் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்களையும் ஆபாச புகைப்படங்களையும் அழிக்குமாறு பேராசிரியையை மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து துணை ஆணையர் அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர் சுகுமார் மீது பேராசிரியை புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார். அப்போது அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற இன்ஸ்பெக்டர் சுகுமார், காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்ட மேலும் சில உயரதிகாரிகளுடன் சேர்ந்து செல்ஃபோனை பறிக்க முயன்று மிரட்டல் விடுத்ததோடு, அவரது சேலையை உருவி டார்ச்சர் செய்திருக்கிறார்.

இதையடுத்து காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட பேராசிரியை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கிறார். அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சுகுமார் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்ட பேராசிரியை குமுறலுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

விடியா திமுக ஆட்சியில், பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

– திருச்சி செய்தியாளர் ஸ்டீபன் மற்றும் பா.சரவணகுமரன்

 

Exit mobile version