நாடெங்கும் பாழ்பட்டு கிடக்கும் 30 சதவிதம் நிலங்கள், 2030-ம் ஆண்டுக்குள் மீட்கப்படும்: மத்திய அரசு

நாடெங்கும் உள்ள நிலங்களில் 30% நிலங்கள் பாழ்பட்டு உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் இவை மீட்டெடுக்கப்படும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகள் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்னையாக பாலைவனமாகுதல்’ அல்லது ‘நிலம் பாழ்படுதல்’ உள்ளது. வளமான நிலம் பயன்பாட்டுக்கு உதவாத நிலமாக மாறுவதே பாலைவனமாதல் அல்லது நிலம் பாழ்படுதல் என்று அழைக்கப்படுகிறது.

காடுகள் அழிப்பு, விவசாய நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது, காலநிலை மாற்றம் ஆகியவை இதன் முக்கிய காரணங்கள். பாலைவனமாதலுக்கு எதிராக ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமீபத்திய ஆய்வுகளின்படி இந்தியாவில் 30% நிலங்கள் பாழ்பட்டும், தரிசாகவும், பாலை நிலமாகவும் உள்ளன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழுள்ள ‘பாழ் நிலங்கள் மீட்பு, காடுகள் மற்றும் காலநிலை மாறுபாடுகள்’ துறையின் இயக்குநர் அனுராதா சிங் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சூழலை பாதிக்கும் என்பதால், 2030ஆம் ஆண்டுக்குள் நாடெங்கும் உள்ள நிலங்களை சமநிலைக்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே நாடெங்கும் நிலங்களை சீரழிவில் இருந்து காக்கவும், நீர் நிலைகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளாலும் மக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் மன்ரேகா திட்டம், தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டம் ஆகியவை கூட நிலத்தை மேம்படுத்தும் திட்டங்கள்தான். ஆனால் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் பொது இன்னும் அதிக பலன்களைப் பெறலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

2014-2015 ஆம் நிதியாண்டில் நிலங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூபாய் 3 லட்சத்து 17 ஆயிரத்து 739 கோடிகளை ஒதுக்கியது. இது அந்த ஆண்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில் 2.54 சதவிகிதமாக இருந்தது. இதில் 82% தொகையின் பயனை வெறும் 18% நிலங்கள் மட்டுமே பெற்றன. இப்படியாக மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துப் பகுதியையையும் சென்றடைவதில் பல சிக்கல்கள் உள்ளன.

இவற்றைக் களைந்து, 2030 ஆம் ஆண்டுக்குள் நீர் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள 945.3 லட்சம் ஹெக்டேர் நிலங்களையும், திறந்த வெளிக் காடுகள் திட்டத்தின் கீழ், ஆயிரத்து 61 லட்சம் ஹெக்டேர் நிலங்களையும் மீட்டெடுக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

உலகின் 196 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ள, பாலைவனமாதலுக்கு எதிரான ஐநா மாநாடு அமைப்பின் 14-வது கூட்டம் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை டெல்லியில் நடக்க உள்ளது.

அப்போது பாழ்நிலங்களை மீட்பது தொடர்பான தனது தொலைநோக்குகளையும் திட்டங்களையும் இந்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்தத் திட்டங்கள் இந்தியாவின் எதிர்காலத்தை இன்னும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version