ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற திருத்த மசோதா பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் தாக்கலானது.
இந்தியர்களின் தனிநபர் அடையாள எண்ணாக ஆதார் அட்டை நடைமுறையில் உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயமல்ல என்றும் கூறியது.
ஆனால், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில், இந்த அவசர சட்டம் காலாவதியானது. இந்தநிலையில், அதற்கு மாற்றாக, வங்கி கணக்கு, சிம் கார்டுகளை பெற ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வழி வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, இந்த மசோதாவை கொண்டு வருவது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் எனவும், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை எளிதாக பெற இந்த மசோதா வழிவகை செய்யும் எனவும் கூறி பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.