திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தனக்கு திருமண ஆசைக்காட்டி 7 கோடி ரூபாய் வரை ஏமாற்றிவிட்டதாக வித்யூத் என்ற சக்கரவர்த்தி மீது சென்னை பெண் மருத்துவர் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தார். திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகிய சக்கரவர்த்தி, வாஷிங்டனில் தானும் மருத்துவராக இருப்பதாக அந்த பெண் மருத்துவரிடம் கூறியுள்ளார். மேலும் திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போவதாக கூறி, பெண் மருத்துவரிடமிருந்து கோடிக்கணக்கில் வித்யூத் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், ஏற்கனவே பெண்களை ஏமாற்றிய வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்கரவர்த்தியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 9க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையதளம் மூலமாக வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றி 9 கோடி ரூபாய் வரை சக்கரவர்த்தி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.