உயரம் குறைவாக இருப்பதால் காதல் கைகூடாத விரக்தியில் அமெரிக்க இளைஞர் ஒருவர் செய்த காரியம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி அவர் செய்த காரியம் என்ன?…. செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
மனிதர்கள் காதலுக்காக பல சாகங்களை செய்ய துணியும் போது, இந்த மனிதர் தன்னை 5 அங்குலம் உயர்த்திக் கொள்ள, கோடிக்கணக்கில் செலவழித்துள்ளார். அவர் தான் அமெரிக்காவைச் சேர்ந்த மோசஸ் கிப்சன் ((Moses Gibson)) இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் தனது உயரத்தை ஐந்து அங்குலம் உயர்த்துவதற்காக, வலிமிகுந்த அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளார்.
5 அடி 5 அங்குலம் உயரமுள்ள மோசஸ், தான் குள்ளமாக இருப்பதாக நினைத்து, இதனால் தன்னை பெண்கள் விரும்பவில்லை என்று எப்போதும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்துள்ளார். தன் உயரத்தை அதிகப்படுத்த மருந்துகள் முதல் ஆன்மீக பயிற்சி வரை அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளார்.
இது எதிலும் பலன் கிடைக்காததால், அறுவை சிகிச்சையை ஒரே ஆயுதமாக கையிலெடுத்தார். ஆனால் இது வலி மிகுந்த கடினமான அறுவை சிகிச்சை என்றும், அதற்கு நிறைய பணம் செலவாகுமென்றும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.தனது முதல் அறுவை சிகிச்சையை கடந்த 2016 ஆம் ஆண்டு செய்த அவர் தனது உயரத்தை 3 அங்குலம் அதிகப்படுத்தியுள்ளார். அதன் பின்பு ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 2 அங்குலம் அதிகப்படுத்தியுள்ளார். மொத்தம் ஒன்றறை கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் தற்போது 5 அடி 10 அங்குலம் உயர்ந்துள்ள மோசஸ், நம்பிக்கையாக இருப்பதாக கூறியுள்ளார். இது வலி மிகுந்த அறுவை சிகிச்சை தான் என்றாலும் கூட, உயரம் அதிகரித்ததால் தன்னால் பெண்களிடம் தைரியமாக காதலை சொல்ல முடியுமென கூறியுள்ளார்.
மென்பொறியியல் துறையில் பணிபுரியும் மோசஸ் தனது அறுவை சிகிச்சை செலவுக்காக இரவு நேரங்களில் கால் டாக்சி ஓட்டியுள்ளார். உயரம் குறைவாக இருப்பெதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கடப்பவர்கள் மத்தியிலும், வாழ்க்கையில் பல இன்னல்களை சமாளித்து குடும்பத்தை ஓட்டும் மனிதர்களுக்கு மத்தியிலும், உயரத்திற்காக மோசஸ் செய்த காரியம் ஆச்சர்யமிக்கதாகவே பார்க்கப்படுகிறது.
– ராஜா சத்யநாராயணன்