மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மலேசியாவில் கேடாக் நகரில் நடந்த உலக சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரைப் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு..
சத்தியமங்கலம் அருகே உள்ள கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைப்பகுதி. இம்மலைப் பகுதியில் உள்ள இராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவுக்குப் பள்ளிக் காலங்களிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த கீர்த்தனா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்குத் தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம் மீது ஆர்வம் கொண்ட கீர்த்தனா, சிலம்பம் பயின்று அதில் தேர்ச்சி பெற்றார். தீவிரப் பயிற்சியின் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்று அண்மையில் கன்னியாகுமரியில் நடந்த தெற்காசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக கீர்த்தனாவுக்கு இந்த ஆண்டு மலேசியாவில் நடந்த உலகச் சிலம்பப் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளப் போதிய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார் கீர்த்தனா. அதனைத் தொடர்ந்து இவரின் திறமையைப் பார்த்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி செய்து மலேசியாவில் நடந்த போட்டிக்கு அனுப்பி வைத்தன. இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, பங்களாதேஷ், உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கோடு இப்போட்டியில் கலந்துகொண்ட கீர்த்தனா இரட்டை வாள் வீச்சு மற்றும் குழு கம்பு வீச்சு என்ற போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு போட்டிகளிலும் முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். மேலும் தொடுமுனை போட்டியிலும் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றார்.