மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வாகனத்தை உருவாக்கிய தமிழக பெண்..

வாழ்க்கையில் எந்த நிலையிலும் சந்தோஷத்தை உங்களால் அனுபவிக்க முடியவில்லை. நீங்கள் பரிபூரண சந்தோஷத்தை அனுபவிக்கும் தருணம் நெருங்கி வரும் நிலையில் நீங்கள் செயல்படாதபடி உடல் உங்கள் முடக்கி மூலையில் போட்டால் என்ன செய்வீர்கள் ? குறைந்தபட்சம் அழுவீர்கள், அதிகபட்சம் நமக்கு விதிக்கப்பட்டது இது தான் என்று மன அழுத்தத்துடன் மீதம் இருக்கும் காலத்தை கழிப்பீர்கள்.ஆனால் ஸ்வர்ணலதா அப்படி இல்லை. அரிதான நோயால் தன் உடல் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த நிலையிலும் , தன் நம்பிக்கை மட்டுமே துணையாக கொண்டு இன்று மற்றவர்களுக்கான தன்னம்பிக்கை விருட்சமாக படர்ந்து நிற்கிறார் ஸ்வர்ணலதா.

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஸ்வர்ணலதா. குடும்பத்தின் மூத்த மகள். ஆண்கள் மட்டும் தான் சம்பாதிக்க வேண்டும், பெண்கள் வீட்டு வேலை பார்த்துக் கொண்டு குடும்பத்தை கவனித்து கொண்டால் போதுமானது என்று நினைக்கும் குடும்ப சூழ்நிலையில் தன் கனவுகளுக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார் ஸ்வர்ணலதா.14 வயதில் பகுதி நேரமாக வேலை பார்த்து குடும்பத்திற்கு தன்னால் ஆன பொருளாதார உதவிகளை செய்ய அவரின் வாழ்க்கையில் விதி முதல் முறையாக விளையாடியது. தான் படித்த கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இவர், அதன் மூலம் ஏற்பட்ட மனஉளைச்சல், மற்றும் குடும்பத்தாரின் நெருக்கடி காரணமாக பல மாதங்களாக தன் வீட்டிலேயே கைதி போல இருந்திருக்கிறார். தன் எதிர்காலம் இப்படியே போய் விடுமோ என நினைத்து பெற்றோர்களிடம் தன் கனவுகள், இலக்குகள் என அனைத்தையும் சொல்லி புரிய வைத்து, விடுபட்ட தன் கல்லூரி வாழ்க்கையில் மீண்டும் நுழைய , விதி தன் கோர முகத்தை மீண்டும் அவரிடம் காட்டியது.

சாலையில் சென்ற போது விபத்து ஒன்றில் சிக்கிய ஸ்வர்ணலதா, கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறார். பல இடங்களில் எலும்பு முறிவு, தொடர் மருத்துவ சிகிச்சை என நாட்களை கடத்தியவர், விபத்து நடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கல்லூரிக்கு சென்று தன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்கிறார். ஆனால் விதி இவரை விடவில்லை, சில அழுத்தம் காரணமாக ஸ்வர்ணலதாவின் தந்தை தற்கொலை செய்து கொள்ள குடும்பம் முழுவதும் திடீரென தனித்து விடப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மூத்த மகளான ஸ்வர்ணலதா குடும்ப பொறுப்பை ஏற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். எது போனாலும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கவில்லை ஸ்வர்ணலதா. தந்தை இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு வேலைக்கு சென்று தன் குடும்பத்தை வழிநடத்தி வந்தார். திருமண வயதில் அனைவருக்குமே பொதுவாக மலரும் காதல் இவருக்குள்ளும் மலர தான் விரும்பிய குருபிரசாத்தைய திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் விரும்பாத இவர்களுடைய உறவினர்கள் இவர்களிடம் தொடர்பை துண்டிக்க, காதல் கணவருடன் மும்பை பயணமானார் ஸ்வர்ணலதா.

திருமண வாழ்க்கை அழகாக நகர அதன் சாட்சியாக மகன் பிறக்க, வாழ்க்கையில் சந்தோஷம் என்பதை அப்போது தான் அனுபவித்தேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஸ்வர்ணலதா. குழந்தை பிறந்த 2 வருடங்கள் மிக மகிழ்வாக சென்றது. இதுவரை தன் வாழ்க்கையில் சோகங்களை மட்டுமே கண்ட நிலையில் மகன் வருகை வாழ்விற்கான அர்த்தத்தை தந்தது. ஆனால் விதிக்கு இதெல்லாம் தெரியுமா என்ன?

அன்று காலை அப்படி விடிந்திருக்க கூடாது தான். 2009 இல் காலை ஒரு நாள் காய்ச்சல் அதிகமாக, மாத்திரை எடுத்துகொண்டு ஓய்வெடுத்திருக்கிறார். 2 நாட்கள் காய்ச்சல் சரியாகி அன்றாட பணிகளை பார்க்கலாம் என்று நினைத்தவருக்கு அன்று மாலையே பக்கவாதத்தால் கால்கள் செயல் இழந்து போனது. மருத்துவர்களிடம் கேட்ட போது , இது மூளையையும், தண்டுவடத்தையும் பாதிக்கும் அரி நோயான Multiple sclerosis என்பது தெரிய வந்திருக்கிறது. மன அழுத்தத்தின் உச்ச கட்டத்திற்கு சென்ற ஸ்வர்ணலதா அதன் பின் சக்கர நாற்காலியில் மீண்டும் புது வாழ்வை தொடங்கி இருக்கிறார்.இத்தனை சோதனைகள் ஏற்பட்ட போதும் தன்னுடைய தன்னம்பிக்கை இழக்காமல் பயணிக்கும் ஸ்வர்ணலதாவின் பலம் அவருடைய கணவர் தான். தன் மனைவியின் ஆசைகளை, கனவுகளை மீட்டெடுத்ததில் இவருடைய பங்கு மிக அதிகம்.

தன்னை போலை ‘Multiple sclerosis’ நோளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் இதற்காக ‘ஸ்வர்கா’ என்ற அறக்கட்டளையையும் உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம் தசை நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான மருந்துகள், மருத்துவ வசதிகள்,கவுன்சிலிங், காது கேட்கும் கருவிகள், சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை என பல உதவிகளை செய்து வருகிறது ஸ்வர்கா அறக்கட்டளை. அதே போல மாற்றுதிறனாளிகள் பயணங்களை சிரமம் இன்றி மேற்கொள்ள பல்வேறு வசதிகள் கொண்ட ‘சாரதி ‘என்கிற வாகனத்தையும் வடிவமைத்து உள்ளார். இந்த வாகனத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறை வசதிகள், ஓய்வெடுக்கும் சோபா மற்றும் கட்டில் வசதிகள் உள்ளன.

மேலும் ‘சௌக்கியா’ என்ற பிசியோதெரப்பி மையம் மூலம் அனைத்து நோயாளிகளுக்கும் இலவச பிசியோதெரப்பி சிகிச்சைகள் நிபுணர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் ஸ்வர்ணலதா ஒரு நல்ல ஓவியரும் கூட. இவர் வரைந்த ஓவியங்கள் பல சர்வேதேச ஓவியக்கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. MRS India Beauty Pegeant South போட்டியில் ரன்னர் அப் பட்டத்தையும் வென்றுள்ளார். மேலும் இன்று தன்னம்பிக்கை மிக்க பேச்சாளராக உருவெடுத்திருக்கும் ஸ்வர்ணலதா பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவன பணியாளர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

வாழ்வில் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டாலும் அதை திடமாக கடந்து இன்று அனைவரும் பாராட்டும் விதத்தில் இருக்கும் ஸ்வர்ணலதா நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

Exit mobile version