சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்று வரும் விவசாயப் பெருவிழா கண்காட்சியைப் பார்வையிட்டு விவசாயிகளும், மாணவ, மாணவியர்களும் பயனடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை வளர்ப்போர் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஆயிரத்து 102 ஏக்கர் நிலப் பரப்பளவில் வி.கூட்டுரோடு ஆட்டுப்பண்ணை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பிரமாண்டமான சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயப் பெருவிழா கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் வேளாண்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் பால்வளம், தோட்டக்கலை மற்றும் பொதுப்பணித்துறைகள் அடங்கிய பல்வேறு துறைகளின் 250 காட்சி அரங்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. காட்சி அரங்கங்களையும், நாட்டின மாடுகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார். தான் ஒரு விவசாயி என்ற நிலையில் அரங்கங்களில் இடம்பெற்றிருந்த கால்நடை இனங்கள், விவசாயத்துக்கான நவீன தொழில்நுட்பக் கருவிகள், மதிப்புக்கூட்டுப் பொருட்களின் தகவல்களை முதலமைச்சர் பழனிசாமி ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
விழாவுக்கு வந்திருந்த ஏராளமான விவசாயிகள் இந்த விவசாயப் பெருவிழா கண்காட்சி அரங்கங்களைப் பார்வையிட்டு, வாழ்வாதாரத்துக்கான, பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டனர்.ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களில் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் கண்டு பயனடைந்துள்ளனர். பிரமாண்டமான கண்காட்சியில் பிற மாநிலங்களில் சென்று பெற முடியாத தகவல்களையும் அறிந்து கொண்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அரங்கத்தின் துவக்கில் இடம் பெற்றிருந்த, மீன்வளத்துறை காட்சி அரங்கத்தில் இடம் பெற்றிருந்த அறிய வகையிலான மீன் இனங்களை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.கடந்த 4 ஆண்டுகளில் கால்நடைத்துறைக்கு மட்டும் 4 ஆயிரத்து 554 கோடியே 42 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இந்த காட்சி அரங்கங்களில் அருங்காட்சியகங்களை அமைத்துள்ளதுடன் கால்நடை வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தது விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அமைந்தது.
விவசாயப் பெருவிழா என்று கூறப்பட்டாலும் வேளாண் மற்றும் கால்நடை மருத்துவம் படிக்கும் தங்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துரைகள் அமைந்துள்ளதாக கூறுகின்றனர் மாணவர்கள்.வேளாண்துறை சார்பில் பல்வேறு சிறுதானிய வகைகளைக் கொண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவப் படங்கள் மற்றும் பழங்கள், பூக்களால் வடிவமைக்கப்பட்டிருந்த பல்வேறு வடிவமைப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தன.மதிப்புக் கூட்டுப் விவசாயப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததுடன் அதன் சிறப்புகளும் எடுத்துரைக்கப்பட்டது.
தோட்டக்கலை சார்பில் இடம் பெற்றிருந்த அரங்கங்களில் இயற்கையாகவே சொட்டுநீர்ப் பாசன நிலங்கள், தோட்டப் பயிர்களின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இங்கு நவீன ரக மாமரங்கள் பயிரிடுவது குறித்தும் விவரிக்கப்பட்டது. விவசாயிகளின் உயிர்நாடியாகத் திகழும் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் அணிவகுப்பும் காட்சி அரங்கத்தை கம்பீரப்படுத்தியிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களைப் பார்வையிட்ட போது, பல்வேறு படைப்புகளை விவசாயிகளுக்கும் தெரியப் படுத்துங்கள் என கேட்டுக் கொண்டார்.விவசாயிகளின் சங்கமமாக செவ்வாய்க் கிழமை வரை நடைபெறும் பெருவிழா கண்காட்சியை காண வந்த பார்வையாளர்கள் கால்நடைப் பூங்கா போல், ஒருங்கிணைந்த வேளாண் பூங்காவையும் தமிழக அரசு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
கால்நடைகள், கோழி வளர்ப்பு மற்றும் வேளாண் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வாயிலாக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ள நீடித்த நிலையான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான, வறுமையில்லா நிலையை அடைவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என முதலமைச்சர் பழனிசாமி விழாவில் பேசியது போல், கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இந்த கண்காட்சி பெரிதும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
Discussion about this post