தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால், பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவல நிலை தொடர் கதையாகி வருகிறது. சில பகுதிகளில் திமுகவினருக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டதால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆர்வத்துடன் மையங்களுக்கு செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை தொடர் கதையாகியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை, அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் என செய்தி தாள்களில் வெளியான தகவலை அடுத்து, அங்கு அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டனர். 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த மக்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஊராட்சி மன்ற திமுக தலைவர் கணேசனை முற்றுகையிட்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது திமுக ஆதரவாளர்கள் பொதுமக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். பகல்12 மணிக்கு மேல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மணிக்கே டோக்கன் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியதால், ஆத்திரமடைந்த தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டனர்.
நாமக்கல் அரசு தெற்கு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில், திமுக பிரமுகர்களுக்கு மட்டும் அரசு அதிகாரிகள் டோக்கன் வழங்கியதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். பல மணி நேரம் காத்துக்கிடக்கும் தங்களை புறக்கணிப்பது ஏன் என்று கூறி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முகாமிற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் காந்தி, திமுகவினரிடம் இருந்து டோக்கன்களை கைப்பற்றி பொதுமக்களுக்கு வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டத்தில் தடுப்பூசிகளும் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் முகாம்களில் முண்டியடித்தனர். பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.
டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகாம்களுக்கு அதிகபட்சமாக 400 டோஸ்கள் மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், வரிசையில் நீண்ட நேரம் காக்க வைத்ததால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சீதாராம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னறிப்பின்றி திடீரென 400 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தகவலறிந்த அங்கு சென்ற மக்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்த, முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், நூற்றுக்கணக்கில் திரண்ட மக்கள் ஏமாற்றமடைந்தனர். பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், முன்னேற்பாடுகளை செய்யாததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தடுப்பூசி செலுத்தப்படாது என நகராட்சி அலுவலர்கள் தாமதமாக அறிவித்ததால், பல மணி நேரம் காத்துக்கிடந்த மக்கள் முனுமுனுத்தபடி திரும்பினர்
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால் காத்திருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், 30 பேருக்கு மட்டுமே தடுப்பூசி உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் காத்திருந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என அறிவிக்கப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்றும், இனி வந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மருத்துவ பணியாளர்கள் அறிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.