விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் ஒரு வயது பெண் குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டதாக, கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி, சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி தனது குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது.
கணவர் இறந்த நிலையில், தந்தை வீட்டில் வசித்து வந்த கலைச்செல்விக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. வறுமை காரணமாக தனது ஒரு வயது பெண் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இடைத்தரகர் கார்த்திக் என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் பெண் குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையின் தாய் கலைச்செல்வி, அவரது தந்தை, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி, இடைத்தரகர் கார்த்திக் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post