பணி சுமைகளை குறைப்பதற்காக, வளர்ந்து வரும் நவீன காலத்தில், பல்வேறு நவீன கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நவீன கருவிகளே சில சமயங்களில் நமக்கு ஆபத்தாக அமைகிறது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் ஆஷ்லி லிமே என்ற பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு நேர பணி செய்து வருகிறார். இவரின் பணிச்சுமை காரணமாக, இரவு நேரங்களில் அவரது 8 வயது மகளை பார்த்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழி தேடிய ஆஷ்லி, தனது குழந்தை இருக்கும் அறையில், குழந்தையை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய ஸ்பீக்கரை பொருத்தியுள்ளார். இதன் மூலம், குழந்தையை கண்காணித்து வந்துள்ளார் ஆஷ்லி.
இந்நிலையில், யாரோ ஒரு மர்ம நபர் தன்னிடம் இந்த ஸ்பீக்கர் மூலமாக பேசினார் என குழந்தை தன் தாயிடம் தெரிவித்தது. இதனை கேட்ட ஆஷ்லி அதிர்ச்சி அடைந்து, கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை சோதனைச் செய்தார். அதில், மர்ம நபர் ஒருவர், நான் சாண்டா லாஸ். நான் உன்னுடைய நண்பன் என சொல்ல… சிறுமி யார் நீ என திரும்பி கேட்கிறாள். அதற்கு நான் சாண்டா கிளாஸ். உனக்கு என் தோழியாக இருக்க விருப்பமில்லையா என மீண்டும் அந்த மர்ம குரல் பேசியுள்ளது.
கண்காணிப்பு கேமரா ஹேக் செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து, அதிர்ச்சியில் உறைந்த ஆஷ்லி, கண்காணிப்பு கேமராவை உடனடியாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள அவர், 4 நாட்கள் கூட ஆகாத நிலையில், கண்காணிப்பு கேமராவின் பாதுகாப்புநிலை கேள்விக்குறியாகி உள்ளது என்றும், ஹேக்கர்கள் தன் குழந்தையின் அறையில் நடப்பதை நிச்சயம் கேமரா வழியாக கண்காணித்து இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், கண்காணிப்பு கேமராவை ரகசிய அறையில் பொருத்தும் முன், அதனை சோதனை செய்ய வேண்டியது மிக அவசியம் என்றும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த தகவலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து விளக்கமளித்த கேமரா நிறுவனம், வாடிக்கையாளரின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் எனவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.