ஈரோட்டில் சிறுவர்களை அடித்து பணம் பறிக்கும், மூன்று வாலிபர்களின் அடாவடி செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட கந்தசாமி வீதியில் 2 சிறுவர்கள் வேலை முடித்து, வார சம்பளத்தை வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுவர்கள் 2பேரையும் வழிமறித்து, பாக்கெட்டில் உள்ள பணம் எடுடா என மிரட்டல் விடுகின்றனர்.
இதில் இருவரும் மறுக்க, கையில் இருந்த பணத்தை பிடிங்கி, முகத்தில் சரமாரியமாக கொள்ளையடிக்கின்ற 3பேரும் தாக்கினர். இதில் நிலைகுலைந்த சிறுவன் ஒருவன் ரத்த காயத்துடன் எழுந்து செல்லும் போது, ஏன்டா அப்படி பார்க்குறா? என கூறி மீண்டும் சரமாரியாக தாக்கி விட்டு பைக்கில் ஏறி தப்பி சென்றனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப் குரூப்பிலும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கருங்கல்பாளையம் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் புகார் அளிக்காததால், காவல்துறையினர் தானாக முன்வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 மர்மநபரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Discussion about this post