சென்னையில் நகை பணத்தை கொள்ளையடித்த முன்னாள் ஹாக்கி வீரரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அபிராம புரத்தில் உள்ள இரு வீடுகளில், கதவை உடைத்து 1 லட்சம் ரூபாய் மற்றும் 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சிகளை சோதித்த காவல்துறையினருக்கு கொள்ளை நடந்த வீட்டிற்குள் எவரும் வந்து சென்றதற்கான காட்சிகள் ஏதும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்,10 வீடுகள் கடந்து ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து செல்லும் காட்சி மட்டும் பதிவாகி இருந்தது. அதனை வைத்து அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது கொள்ளையனை அடையாளம் கண்டறிந்தனர். பல வருடங்களாக இரும்பு கம்பியால் வீடுகளின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது ஹாரி பிலிப்ஸ் மைக்கேல் என்பதும், இவர் முன்னாள் ஹாக்கி வீரர் என்றும் தெரிய வந்தது. போதை பழக்கத்துக்கு அடிமையான மைக்கேலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுவரை 55 வீடுகளில் கொள்ளையடித்த மைக்கேல், 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.