நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் செம்மரகன்றுகள் வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை திண்டுக்கல் வனவியல் விரிவாக்க மையம் உயர்த்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாநில அரசின் வனவியல் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. இங்கு தேக்கு, சவுக்கு, குமிழ், மகானி, வேங்கை, செம்மரம், மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகள் நிலத்துக்கான ஆவணங்கள், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் வன விரிவாக்க மையத்தை அணுகினால் மைய அலுவலர்கள் விவசாயிகளின் இடத்துக்கே நேரில் சென்று ஆய்வு செய்து, மண்ணின் வளத்துக்கேற்ப மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகின்றனர். ஒரு ஏக்கருக்கு 400 அல்லது 500 கன்றுகள் வரை வழங்கி, அவற்றை முறையாகப் பராமரிக்கும் வகையில் பயிற்சி, மண் புழு உரம் மற்றும் தேவையான வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறுகின்றனர்.