ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ்…

2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நேற்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ். இவரைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. யார் இந்த பேட் கம்மின்ஸ்?.

 

இவர் ஆஸ்திரேலிய அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தனது ஆட்டத்தைக் கடந்த 2011ஆம் ஆண்டில் தொடங்கினார். இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளிலும், 58 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் 53 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 134 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். 

 

இந்த ஆண்டின் ஜூலை மாதம் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே நடந்த பாரம்பரியம் மிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவர் 5 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதன் தொடர்ச்சியாகவே இவருக்கு ஏலத்தில் நல்ல மதிப்பு கிடைத்துள்ளது.


ஐ.பி.எல்லைப் பொறுத்தவரை இவர் கடந்த 2014ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் முதன் முறையாகக் களம் இறங்கினார், இதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக அப்போது களம் இறங்கினார். 2017ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை 4 கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி இவரை 5 கோடியே 4 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது, ஆனால் காயம் மற்றும் உடல் நலக் குறைவால் இவர் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கவில்லை. இப்போது மீண்டும் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக களம் இறங்க உள்ளார்.

Exit mobile version