சென்னை மாதவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த கல்லூரி மாணவன் உட்பட இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
புழல், சிவராஜ் நகரைச் சேர்ந்த மாலதி என்பவர், மாதவரம் பால்பண்ணை அருகே நடந்து சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மாலதி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இது குறித்துக் காவல்நிலையத்தில் மாலதி அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய இருவரைத் தேடி வந்தனர். இந்த வழிப்பறியில் ஈடுபட்டவர்களைக் கண்காணிப்புக் கேமரா காட்சி மூலம் அடையாளம் கண்ட காவல்துறையினர், திருவிக நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ராஜேசையும், புழலைச் சேர்ந்த ஒட்டுநர் டில்லிபாபு எனபவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 பவுன் நகையைப் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.