கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊரடங்கு சமயத்திலும் கூட, 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, 30 பெண்களுக்கு இலவச தொழில்முனைவோர் பயிற்சியும் அளித்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் என்பதை பார்க்கலாம். டெரகோட்டா நகைகள் களிமண்ணை குழைத்து பக்குவமாக்கி, தேவைக்கு ஏற்றபடி நகைகளாக வடிவமைப்பது தான் டெரகோட்டா எனும் சுடுமண் நகைகள்… தங்கம் வெள்ளி நகைகளுக்கு மாற்றாக மார்டன் அணிகலன்களாக இவைகள் பிரபலமடைந்து வருகின்றன. கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்மிர்தி, பேஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். சிறுவயது முதலே ஓவியம் கலைப்பொருட்கள் மீதான ஆர்வம் கொண்ட இவர் டெரகோட்டா அணிகலன்கள் மீதான ஈர்ப்பினால் அவற்றை தாமாகவே வடிவமைக்க தொடங்கியுள்ளார். அதிக மெனக்கெடலுடன் அர்ப்பணிப்போடு இவர் வடிவமைக்கும் கலைநயம் மிக்க சுடுமண் நகைகள் பலரிடமும் வரவேற்பை பெற்று வருகின்றன.
கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள நினைத்த ஸ்மிர்தி பகலில் டெரகோட்டா நகை வடிவமைப்பிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆன்லைன் வகுப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள தொடர்புகள் மூலம் இவற்றை விற்பனை செய்து 2 லட்சம் ரூபாய் வரை வருமானமும் ஈட்டியுள்ளார். கூடவே 30 பெண்களுக்கு இலவசமாக டெரகொட்டா நகை தயாரிப்பு பயிற்சி வழங்கிய ஸ்மிர்தி அவர்களை தொழில்முனைவோர்களாகவும் மாற்றியுள்ளார். ஸ்மிருதியின் தனித்துவமான வடிவமைப்புகள் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகள் வரை பிரபலமடைந்துள்ளன. கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி திறமையை வெளிப்படுத்தினால் நினைத்ததை சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் மாணவி ஸ்மிர்தி.
Discussion about this post