விவசாயிகள் பெயரில் வங்கி கடன் பெற்று 110 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தனியார் சர்க்கரை ஆலை அதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சர்க்கரை ஆலை அதிபர் ராம் தியாகராஜன், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வருகிறார். இந்த ஆலைகளுக்கு கரும்பு வழங்கி வந்த விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் வங்கியில் கடன் வாங்கியுள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்த கோரியும் வங்கிகளில் இருந்து நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், கொடுத்த புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆலை அதிபர் ராம் தியாகராஜன் விவசாயிகளின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி 110 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.