பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் பயணமாக சீனா சென்றுள்ள இம்ரான்கான், அந்த நாட்டின் அதிபரை சந்தித்து பேசினார்.
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி ஏற்றார். தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் இம்ரான் கான், வெளிநாட்டு கொள்கையில் இதற்கு முன்பு இருந்த பாகிஸ்தான் பிரதமர்களை போல சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார்.
இதனிடையே இம்ரான் கான், பிரதமராக பதவி எற்ற பின்பு முதல் வெளிநாட்டு பயணமாக சீனா சென்றுள்ளார்.
நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக சீனா சென்ற அவருக்கு, பெய்ஜிங்கில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவில் இந்த சுற்றுப்பயணம் புதிய அத்தியாயத்தை படைக்கும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post