நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பர்கர் சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தரமற்ற உணவுகளை தடுக்க நடத்தப்பட்ட சோதனைகள் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார், தனது மகள் கலையரசி மற்றும் குடும்பத்தாருடன் ஷவர்மா பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதே கடையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது பிறந்த நாளுக்காக, அதே உணவகத்தில் தனது நண்பர்களுக்கு சவர்மா வாங்கி கொடுத்துள்ளார். அந்த ஷவர்மாவை சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயதான கலையரசி என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி இறந்த சோகம் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது நாமக்கல்-சேலம் சாலையில் இயங்கி வரும் மிஸ்டர் பர்கர் என்ற தனியார் உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட, நாமக்கல் பூங்கா நகரை சேர்ந்த18 வயது சிறுவன் சஞ்சய், வயிற்று போக்கு காரணமாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுவாக உணவகம் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தீயணைப்பு துறை, குடிநீர் வாரிய துறை போன்ற துறைகளில் அனுமதி பெற வேண்டும். உணவகம் திறக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு 6 மாத இடைவெளியிலும் சம்பந்தப்பட்ட துறையினர் பாதுகாப்பான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை உணவகத்தின் தரம் குறித்து ஆராய்ந்து, உரிமத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுப்பித்து தர வேண்டும்.
ஆனால் தற்போது சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஷவர்மா கடையிலும், பள்ளி மாணவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வர காரணமாக இருந்த பர்கர் கடையிலும் இதுபோன்ற விதிகள் பின்பற்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சிறுமி உயிரிழப்புக்கு பிறகு நாமக்கல் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை என்ற பெயரில் நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றினர். சமீபகாலமாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஊடகங்களை அழைத்துக் கொண்டு தம்பட்டம் அடிக்கும் வேலையை பார்த்து வருகின்றனர். உறுப்படியாக மக்கள் நலனில் அக்கறையோடு நடந்துகொள்வதாக தெரியவில்லை. விடியா திமுக ஆட்சியில் அதிகரித்து வரும், குற்றங்களால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, நிர்வாக திறனற்ற செயலால் உடல்நிலை பாதிப்பதோடு, விலைமதிப்பில்லாத உயிரையும் இழக்க வேண்டியுள்ளது. தற்போது மக்களுக்கு நஞ்சை உணவாக கொடுத்து, தமிழக மக்களை பாதுகாக்க முடியாது, திராணியில்லாத அரசாக, திமுக அரசு உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Discussion about this post