சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 70 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடியா அரசு அறிவித்தபடி செப்டம்பருக்குள் பணிகள் நிறைவடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் மழைநீர் அதிகம் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, விடியா ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த பணிகள், இதுவரை 70 விழுக்காடு மட்டுமே முடிவடைந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வடசென்னைக்குட்பட்ட கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 முதல் 7 மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில், கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கும் ஒப்பந்ததாரர்கள், தற்போதைய நிலவரப்படி கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக 40 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டுமாம். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி ரூபாய்க்கு 8 விழுக்காடு வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், அவற்றை கொடுக்காததால் 30 விழுக்காடு பணிகள் நடைபெறாமல் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் தென் சென்னைக்குட்பட்ட, மேற்கு மாம்பலம், கே.கே நகர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் போன்ற இடங்களிலும், அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இணைப்பு பணிகள் என்பது முடிவடையாமல் இருப்பதாகவும், இந்த பணிகள் பருவமழை காலம் முடிந்த பின்னர் தான் முடிவடையும் என்றும் ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் இப்படி கூறும் நிலையில், தமிழக அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவோ அதிகாரிகளை அழைத்து, மழைநீர் வடிகால்வாய் பணிகளின் நிலவரம் குறித்த புள்ளி விபரங்கள் தெரியாமல் வருகிற 30-ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் எவ்வித தகவலும் தெரியாமல், செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விட வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டிருப்பது, வேடிக்கையாக இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கால்வாய்க்காக குழி தோண்டப்பட்ட பகுதிகள் முழுவதும் மழையில் சேரும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. காலை, மாலை நேரங்களில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர். இதையெல்லாம் காணாமல் கடந்துவிட்டு, சீரும் சிறப்புமான ஆட்சி வழங்கி வருவதாக வெற்றுக் கூச்சலிட்டு வருகிறது விடியா அரசு.
Discussion about this post