விண்வெளித்துறையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சாதித்து வருவது நம் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக செயல்பட்டு வரும் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
உலகளவில் 4ஆவது நாடாக சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாளை காலை
ஆதித்யா எல் -1 என்ற செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்புகிறது. அதற்கான கவுண்ட் டவுன் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதித்யா எல் -1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த சேக் மீரான், சைத்தூன் பீவி தம்பதியரின் 2-வது மகளான நிகர்சுல்தான் என்ற நிகர்ஷாஜி தான், தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி, 1987ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக, நிகர்ஷாஜியின் அண்ணனும், பேராசிரியருமான ஷேக்சலீம் கூறும்போது, தனது தங்கை ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது தனக்கும், தனது குடும்பத்திற்கும் மிகவும் பெருமையான தருணம் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
கிராம பின்புலங்களை கொண்டு கல்வி பயின்று, தற்போது உலகமே வியக்கும் வகையில் சூரியனை ஆய்வு செய்வதற்கான செயற்கைக்கோளுக்கு திட்ட இயக்குநராக பணியாற்றி வருவது, தனது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளதாக நிகர்ஷாஜி பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரான தமிழ்வாணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நிகர்ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் தஸ்நீம், மங்களூருவில் மருத்துவம் பயின்று வருகிறார்.
ஆதித்யா எல்-1 மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. இத்தகைய விண்கலத்தை தயாரிப்பதில் முதன்மை பணியில் இருக்கும் நிகர்சாஜியின் பணி கண்டு தமிழகமே பெருமை கொண்டுள்ளது.
Discussion about this post