மதுரை எழுச்சி மாநாடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்கள் சந்தித்து பேசினர். பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பின்வருமாறு பேசியுள்ளார்.
இந்த மாநாட்டைப் பற்றி எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.மதுரை மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக பதினோறு மாவட்டத்திற்கு சென்றோம். அனைத்து இடங்களிலும் மாபெரும் கூட்டம், மேலும் பல தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் மதுரை மாநாட்டிற்கு வருகிற கழகத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு காவல்துறையிடம் அனுமதியும் ஒப்புதலும் பெறுங்கள் என்று கழகப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் எங்களிடம் கூறினார். அதன்பொருட்டு இன்றைக்கு நாங்கள் பாதுகாப்புக் குறித்து காவல் கண்காணிப்பாளரை சந்தித்து உரையாடினோம். அதிகாரி அவர்களுக்கே மாநாடு பற்றிய சிறப்பு தெரிந்துள்ளது. அதனால் கண்டிப்பாக கூடுதல் பாதுகாப்பு அளிப்போம் என்று சொல்லியிருக்கிறார். அதேபோல போக்குவரத்து நெரிசல் இல்லாதவாறு போக்குவரத்து காவல்துறையினரும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், எத்தனை காவல்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபட வைக்கலாம், வாகனங்களை மாற்று பாதையில் செல்ல பணிப்பது குறித்தும் பேசியுள்ளோம்.
அதேபோல் கழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிற வாகனங்களை வெகுதொலைவிலேயே நிறுத்த சொல்லிவிட்டு நடந்துவரும்படி செய்தால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே சற்று அருகாமையில் அவர்கள் வாகனத்தினை நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கின்றோம் என்று சொல்லியிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Discussion about this post