உலகில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஜூலை மாதம் இருக்கும் என காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு வெப்பம் இதைவிட உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த ஒரு நூற்றாண்டில் உலகின் மிக அதிக வெப்பமான மாதமாக இந்த ஜூலை மாதம் இருக்கும் என்று காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஜூலை மாதம் தான் அதிக வெப்பம் தகிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 2024ஆம் ஆண்டு வெப்பநிலை இதைவிட உச்சங்களை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
சுட்டெரித்த ஜூலை..!
நிலத்தில் மட்டுமின்றி கடலிலும் இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிபுணர் ஸ்ரீகாந்த் கூறினார்.உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிசி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அடுத்து
ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இப்படி ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியது.
இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டன. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது கூட இதனால் தான். இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளிலும் வெப்ப அலைகள் உக்கிரமாக வீசின. இதன் காரணமாக அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
2024…ல் அதிகரிக்குமா?
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு ஜூலையில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2024ஆம் ஆண்டு வரை தொடரும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
குறைவான மின் பயன்பாடு, பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துதல், அதிகளவில் மரங்களை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், அதுவும் உடனடியாக நிகழாது சில பல ஆண்டுகள் ஆகலாம். எனவே எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி தற்போது இருந்தே பொறுப்புடன் செயல்பட வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post